Saturday, January 23, 2016

2015- சீசன்-2 (ஜூலை-டிசம்பர்) – அறுவடை (பகுதி – 2)



குட்டி மஞ்சள் தக்காளி

பார்ப்பதற்கு செர்ரி தக்காளி (Cherry Tomato) மாதிரி இருந்தாலும் இது நாட்டுத் தக்காளி தான். நண்பர் பரமேசிடம் வாங்கிய விதைகளில் இதுவும் ஓன்று. நான் ‘குட்டி’ என்பதை சரியாக கவனிக்காமல் ‘மஞ்சள் தக்காளி’ என்பதை மட்டும் படித்து நிறைய செடிகளை போட்டு விட்டிருந்தேன். கொத்து கொத்தாய் பூக்கும் போதே இது சாதாரண தக்காளி மாதிரி இல்லையே என்று கொஞ்சம் சந்தேகம் வந்தது. பிறகு விதை பாக்கெட்டை படித்து பார்த்ததில் ‘குட்டி மஞ்சள் தக்காளி’ என்றிருந்தது. நாட்டு தக்காளியில் இப்படி ஒரு வகை இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. தட்டில் வைத்துப் பார்த்தால் புதிதாய் ஏதோ ஸ்வீட் அடுக்கி வைத்த மாதிரி ஒரு அழகு. சாம்பாருக்கு ஒரு கை நிறைய அப்படியே அள்ளி போட்டுக் கொள்ளலாம்.







செர்ரி தக்காளி (Cherry Tomato)

ரொம்ப நாள் செர்ரி தக்காளி முயற்சிக்க வேண்டும் என்று ஒரு கண்காட்சியில் ஹைப்ரிட் விதை பாக்கெட் ஓன்று வாங்கி வந்திருந்தேன். செடி கன்னாபின்னாவென்று நீளமாய் வளர்கிறது. ஒரு கயிறு கட்டி அதில் சுற்றி விட்டால் நல்லது. கிட்டதட்ட மேலே பார்த்த குட்டி மஞ்சள் தக்காளி மாதிரி தான். ஆனால் நிறம் மட்டும் நல்ல அடர் சிவப்பு. தற்போது விளைச்சல் கொடுத்து கொண்டிருக்கிறது





நாட்டுத் தக்காளி

விதை நண்பர் பரமேசிடம் வாங்கியது. ஜூலையில் நடவு செய்த செடிகள் காய்த்து கொட்டியது என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவுக்கு விளைச்சல் எடுக்க முடிந்தது. அதனால் அக்டோபர் வாக்கில் மறுபடி கொஞ்சம் நாற்று எடுத்து நிறைய பைகளில் வைத்து விட்டேன். இப்போது அந்த செடிகள் நன்றாகவே காய்த்து பலன் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதுவும் தக்காளி கிலோ ஐம்பது, அறுபது என்று போன இந்த வேளையில் தேவைக்கு அதிகமாகவே காய்த்து கொண்டிருக்கிறது. 




மிளகாய்        

நாட்டு விதைகளில் ரொம்பவே சொதப்பியது மிளகாய் தான். இலைச் சுருட்டல் நோய் வந்து பெரிதாய் விளைச்சல் எடுக்க முடியவில்லை. மிளகாய் மறுபடி போட்டும் சில பிரச்சனைகள் வருகிறது. சீசன் பிரச்சனையா, நோய் பிரச்சனையா என்று என்று தெரியவில்லை. இந்த சொதப்பலை நான் போன பதிவில் கூறிய கார மிளகாய் (Hot Pepper) விளைச்சலை கொண்டு சரி செய்து கொண்டேன். மிளகாய் இந்த தை பட்டத்தில் சரியாய் கொண்டுவர முடியும் என்று நினைக்கிறேன்.

குடை மிளகாய்

குடை மிளகாய் செடி கத்தரி, தக்காளியை விட ஒரு எளிதாக காய்க்கும் செடி ஆகி போனது. இந்த விளைச்சலை ஏற்கனவே என்னுடைய முதல் வீடியோவின் இறுதியில் கொடுத்திருந்தேன். விதை Omaxe Hybrid Seed, இணையத்தில் வாங்கியது. அதில் அடர் ஊதா நிறத்தில் நிறைய காய்த்தது. ஆரஞ்சு மஞ்சள், சிவப்பு நிறமும் நிறைய கிடைத்தது. வெள்ளை நிறம் முயற்சித்து எந்த செடியிலும் வெள்ளை நிற குடைமிளகாய் வரவில்லை.








கொடிகள்

கொடியை பொறுத்த வரையில் சொதப்பல் இந்த சீசனிலும் தொடர்கிறது. நான் என்ன தான் முயற்சித்தாலும் எல்லாமும் கருப்பு கொடியை தான் காட்டுகின்றன. எல்லாவற்றிலும் சொல்லி வைத்தது போல ஒரே ஒரு காய். அதையும் பறித்து குழம்பு வைத்து சந்தோஷ பட்டுக் கொண்டோம். செடியில் அவரை காய்க்கிற மாதிரி, செடி பாகல், செடி புடலை, செடி சுரை என்று இருந்தால் நல்லா இருக்கும் போல. ஜூலையில் தரையில் வைத்த புடலை, பாகல் எல்லாம் ஏகத்துக்கு சொதப்ப ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் பிடுங்கி விட்டு பைகளிலேயே காயர் பித் வைத்து செய்து பார்க்கலாம் என்று செப்டம்பரில் இன்னொரு நடவு செய்தேன். பாகல் செமையாக வந்தது. வெற்றி.. வெற்றி என்று மனசு லேசா கூவ ஆரம்பிப்பதற்குள் செடியின் தண்டு எல்லாம் தடித்து செடி அப்படியே குன்றி போனது. புடலையும், பீர்கனும் ஏகத்துக்கு பூத்து கடைசியில் ஒரே ஒரு காய் மட்டும் கொடுத்தது. சுரையில் வெறும் பூ மட்டும் தான். கடுப்பில் செடி வாடி போகட்டும் என்று தண்ணீரே ஊற்றாமல் ஒரு வாரம் விட்டு விட்டேன். திடீரென்று ஒரு காய் மட்டும் கண்ணில் தட்டுபட, இதிலும் ஒரு காய் பறிக்கனும்னு இருக்கும் போல என்று மறுபடி நீர் ஊற்ற ஆரம்பித்து இருக்கிறேன்.

செடிக்கும் கொடிக்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது. முக்கிய வித்தியாசம் கொடியில் மட்டும் தான் ஆண் பூ, பெண் பூ என்று இருக்கிறது. பெண் பூவில் பூவின் காம்பிலேயே சிறிதாக காய் இருக்கும். அது மட்டும் தான் காய்க்கும். தவிர பெண் பூ பூத்தாலும் அது அயல்  மகரந்த சேர்க்கையை நிறைய சார்ந்திருக்கிறது. தோட்டத்தில் தேனீ, வண்ணத்து பூச்சிகள் வரத்து ஏதும் இல்லை என்றாலும் பிரச்சனை தான். அதை சரி செய்ய நாமே hand pollination செய்யலாம் (ஒரு ஆண் பூவை பறித்து காயோடு பூத்திருக்கும் மலர் மேல் லேசாய் தேய்த்து விடலாம்). கொடிக்கு அதற்குண்டான சத்துக்களோ, தகுந்த சீசனோ அமையவில்லை என்றால் ஆண் பூவாக தான் வருகிறது. சீசன் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும் (நண்பர் ஒருவர் கொடி அவரை பனி காலத்தில் (மார்கழி) நன்றாக காய்க்கும் என்றார். அதற்கு ஏற்றார் போல ஆகஸ்ட், செப்டம்பரில் விதைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்).

கொடியை பொறுத்தவரை சவால் நிறையவே இருக்கிறது. சீக்கிரம் கற்றுக் கொண்டு எதாவது உருப்படியாய் இந்த தை படத்திலாவது செய்ய வேண்டும்.  



  

புது வரவுகள்

ஏற்கனவே நாம அசுவினி, மாவுப் பூச்சி என்று போராடிக் கொண்டிருக்க, இந்த சீசனில் புதிதாய் இரண்டு பூச்சிகள் வந்து கடுப்பை கிளப்பிவிட்டு செத்து போயின.

கொடி எல்லாம் சொதப்பிக் கொண்டிருக்க மிதிபாகல் மட்டும் அழகாய் காய்த்துக் கொண்டிருந்தது. இது பொறுக்காமல் மஞ்சளாய் ஒரு பூச்சி கூட்டம் வந்து மொத்தமாய் செடியை மொட்டை அடித்துவிட்டது. கொடி முழுவதும் பரவி இலையை தின்று தீர்த்துவிட்டது. கடுப்பில் மொத்த செடிக்கும் தீ வைத்து காலி செய்தேன். கொடுமை என்னன்னா, பெரிய பாகல் சரியாய் வரலை என்று மீண்டும் விதை போட்டு அப்போது தான் முளைத்த நாற்றுகளையும் காலி செய்துவிட்டன. 






ஆச்சரியமாய் இந்த முறை மாமரம் கோடை சீசன் முடிந்தவுடன் மறுபடி ஜூலையிலும் பூத்தது. டிசம்பர் குளிரில் கொத்து கொத்தாய் மாம்பழங்கள் சாப்பிட்டோம் J. கோடை சீசன் அளவுக்கு இல்லை என்றாலும் பதினைந்து கிலோ அளவுக்கு காய் கிடைத்தது. காய்க்கும் பருவத்தில் அங்கங்கே மாமரம் காய்ந்தது போல தெரிந்தது. அச்சோ, ஏதோ நோய் போல என்று நினைத்து பெரிதாய் ஏதும் பார்க்கவில்லை. காய் பறிக்க மேலே ஏறிய போது தான் அத்தனையும் பூச்சி தாக்குதல் என்று தெரிந்தது. கம்பளி பூச்சி மாதிரி, ஆனால் வித்தியாசமாய். உடம்பில் லேசாய் பட்டுவிட்டால் கூட ஊசி குத்தின மாதிரி ஒரு வலி. அப்படியே அந்த இடம் முழுவதும் தழுத்து விடுகிறது. இன்னும் கொஞ்சம் விட்டிருந்தால் மாமரம் மொத்தமும் காலி ஆகி இருக்கும். நிறைய கிளைகளை வெட்டி மொத்தமாய் போட்டு கொளுத்தி காலி செய்தேன். இந்த கோடை சீசனுக்கு மறுபடி நிறைய பூத்து பிஞ்சி பிடித்திருக்கிறது.




மொத்தத்தில் போன ஆடிப்பட்டம் (ஜூன்-ஜூலை சீசன்) அடிப்படை காய்கறிகளில் நாட்டு ரகம் கொண்டு சிறப்பாய் அமைந்தது. கொடிகளை சாதாரணமாக எடுத்து ஆரம்பிக்காமல் இன்னும் கவனம் எடுத்து இந்த தை பட்டத்தில் செய்ய வேண்டும். இந்த தை பட்டத்திற்கு விதை போட்டு இப்போது தான் விதைகள் எல்லாம் முளைத்து விட்டன. சில புது வரவுகள், புது முயற்சிகள் இருக்கிறது. விவரமாய் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Saturday, January 9, 2016

என் வீட்டுத் தோட்டத்தில் – கார மிளகாய் (Hot Pepper)



நாம ஏதாவது கண்காட்சி போனால், வீட்டுக்கு ஏதாவது வாங்குகிறோமோ இல்லையோ ஒரு ஐநூறு ரூபாய்க்காவது விதைகள் வாங்கினால் தான் வெளியே வருவது. அதிலும் இந்த ஹைப்ரிட் விதை பாக்கெட் நிறைய படம் பார்த்தே விதை பாக்கெட்டுகள் நம் கைகளில் வந்துவிடும். அது நமக்கு வேண்டிய காய்கறியா, நம்ம ஊருக்கு ஒழுங்கா வருமா என்பதெல்லாம் இரண்டாவது தான். அப்படித்தான் இந்த Hot Pepper விதையும். மிளகாய் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என்று ஒரு கலவையாக மெழுகு போல அடுக்கிய அட்டை படத்தை பார்க்கவே ரொம்ப அழகாய் இருந்தது. அப்புறம் என்ன, ஒரு பாக்கெட் வாங்கியாகி விட்டது. பத்து விதைக்கு விலை வெறும் 55 ரூபாய் தான் :)

இந்த சீசனில் மற்ற மிளகாய்கள் ரொம்பவே சொதப்பியது. காலாவதியான ஹைப்ரிட் விதையும், நண்பர் பரமேசிடம் வாங்கிய நாட்டு விதைகளும் சுமாரான விளைச்சலையே கொடுத்தது. நிறைய செடிகள் இலை சுருண்டு போய் சரியாகவே வரவில்லை (இது கற்றுக் கொள்ள வேண்டிய இன்னொரு ஏரியா). அதை எல்லாம் ஈடுகொடுக்கும் வகையில் இந்த Hot Pepper விளைச்சல் தேவையான மிளகாயை கொடுத்தது (அதனால் நான் ஹைப்ரிட் விதையை எல்லாம் பரிந்துரைக்கவில்லை :) )

மொத்தம் பத்து விதையில் எட்டு போல முளைத்திருக்கும். அதில் ஒரு மூன்று செடியை மாடியில் பையில் வைத்துவிட்டு, சிலவற்றை தரையில் வைத்து விட்டேன். தரையில் வைத்த செடிகள் சுமாராகவே காய்த்தது. ஆனால் மாடியில் வைத்த செடி காய்த்து கொட்டிவிட்டது. பறித்ததில் நிறைய காயபோட்டு வற்றலுக்கே பயன்படுத்தும் அளவுக்கு மூன்று செடிகளிலும் விளைச்சல்.

மிளகாயை பார்க்கவே அழகு. இதை சிலர் ‘வானம்பாடி மிளகாய்’ ‘வானம் பார்த்த மிளகாய்’ என்றார்கள். மற்ற மிளகாய் எல்லாம் தரை பார்த்து கொண்டிருக்க, இந்த மிளகாய் வானம் நோக்கி வளர்கிறது. வெளிர் பச்சை நிறத்தில் ஆரம்பித்து ஆரஞ்சு நிறம் மாறி கடைசியில் சிவப்பு நிறத்தில் மாறுகிறது. எல்லா நிறத்திலும் செடியில் மிளகாய் பார்க்க கிட்டத்தட்ட Ornamental Chilli மாதிரி இருக்கிறது. தோட்டத்தில் வரிசையாய் வைத்து விட்டால் ஒரு அலங்கார செடி போல ஆகிவிடும் போல.

காரம் பட்டையை கிளப்புகிறது (அதான் Hot Pepper என்று பெயர் வைத்திருக்கிறார்கள்). இந்த தை பட்டத்திற்கும் ஒரு பாக்கெட் வாங்கி வைத்திருக்கிறேன்.  













 
 கீழே இருப்பது வெறும் ஒரு செடி தான். பூங்கொத்து மாதிரி இது மிளகா கொத்து. 







நாங்களும் அதே மாதிரி அடுக்கி போட்டோ எடுப்போம்லா :)